நீங்கள் இருப்பது : முகப்பு // இலக்கியம், பேட்டிகள் // எழுத்தாளர் ரிஷான் ஷெரீப் பேட்டி

எழுத்தாளர் ரிஷான் ஷெரீப் பேட்டி

ஒரு வருடம் முன்பு எங்களின் இனைய இதழில் வெளியான எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின் பேட்டி இது, அதை காண இங்கே சொடுக்கவும். சரியாக எழுத்து தெரியாததாலும், இதுவரை இணையதளத்தில் வெளியாகாததாலும் இப்போது மறுபடியும் வெளியிடுகிறோம்..* இலங்கையில் பிறந்து, கத்தார்ல வாழ்ந்து, இந்தியாவின் எழுத்தாளரா இருக்கும் உங்களுக்கு இந்த 3 நாடுகளிலுள்ள வேறுபாடுகள் மற்றும் உதவியானவைகள் எவை?

‘இந்தியாவின் எழுத்தாளர்’ என நீங்கள் என்னைக் குறிப்பிடுவதன் பொருள் எனக்குப் புரியவில்லை. இப்பொழுது எனது அதிகமான ஆக்கங்கள் இந்திய இதழ்களில் வெளிவருவது உங்களை இப்படிக் கேட்க வைத்திருக்குமென நான் நினைக்கிறேன். இலங்கையிலிருந்த காலகட்டத்தில் தினக்குரல், வீரகேசரி, தினகரன், எங்கள் தேசம், அல்ஹசனாத், தாகம், செந்தூரம் என அதிகமான இலங்கை அச்சு ஊடகங்களில் எழுதிக்கொண்டுதானிருந்தேன். இப்பொழுதும் யாத்ரா, எதுவரை, கலைமுகம் போன்ற இலங்கை இலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். பணி புரியவென கத்தாருக்கு வந்த பிற்பாடுதான், அனேகமான இணைய இதழ்கள் மற்றும் இந்திய இதழ்கள் அறிமுகமாகின.

ஒரு இடத்தில் செழித்து வளர்ந்த கொடியொன்றினைப் பிடுங்கி, வேறொரு இடத்தில், வேறொரு மண்ணில் நட்டுவிடுவது போலத்தான் தனியான வெளிநாட்டு வாழ்க்கை. அதுவரையில் இவ்வளவு தூரத்துக்கு, இவ்வளவு காலத்துக்கு எனது சொந்தங்களை, உறவுகளைப் பிரிந்தவனில்லை நான். எனவே இப்பாலைநிலத்தில் தனித்துப் போனபின்பு நாட்குறிப்புக்களில் கிறுக்கிக் கொண்டிருந்தவற்றை வேலை நேரம் தவிர்த்து எஞ்சிய நேரங்களில் ஒரு பொழுதுபோக்குப் போல, வலையேற்றத் தொடங்கினேன். கிளர்ந்தெழும் வீடு, சொந்தங்களின் ஞாபகங்களை அடக்கிவைக்க எழுத்து எனும் தோழனை அருகிலமர்த்திக் கொண்டேன். அத் தோழன் இப்பொழுது என்னை இழுத்துப் போய்க்கொண்டிருக்கின்றான்.

எப்பொழுதும் எனது எழுதும் மனநிலையைப் பொறுத்துத்தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். சில நாட்களில் எதுவும் எழுதத் தோன்றாது. அவ்வாறான நாட்கள்தான் அதிகமாக இலங்கையில் எனதாக இருந்தன. அந்தக் காலங்களில் எழுதுவதை விடவும், வீடு முழுக்க நிறைந்திருந்த எனது சகோதரனின் புத்தகங்களையெல்லாம் வாசிப்பதில் மட்டுமே அதிக ஆர்வம் இருந்தது. அவ்வப்போது எழுதத் தோன்றுபவற்றை மட்டும் எழுதி வார, மற்றும் மாத இதழ்களுக்குக் கொடுத்துவிடுவேன். மிகப் பிடித்தமானதாக வாசிப்பும் அதற்கடுத்ததாக எழுத்துமென இலங்கையில் வசித்த காலத்தில் எனது பொழுதுபோக்கு இருந்ததெனச் சொல்லலாம்.

ஆனால் இப்பொழுது கத்தாரில் அது மாறியிருக்கிறது. வாசிக்கும் ஆர்வம் அதேயளவு மிகைத்திருக்கிறது. ஆனால் இங்கு சிறந்த, நான் வாசிக்கும் தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பது குறைவு. இல்லையென்றே சொல்லலாம். இங்கு வந்த பிறகு வீட்டிலிருந்தும், கவிஞர் ஃபஹீமா ஜஹானும் அவ்வப்போது நூல்கள், கவிதைத் தொகுப்புக்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பலர் தங்கள் தொகுப்புக்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் வாசிக்கும் நேரம் இங்கு ஆரம்பித்திலிருந்தது போல இப்பொழுது கிடைப்பதில்லை. எனது கவிதை, சிறுகதை, கட்டுரை எனக் கேட்கும் இதழ்களைக் காக்கவைப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனவே கிடைக்கும் ஓய்வு நேரத்தை எழுதுவதற்கும், எழுதுவதைச் செப்பனிடுவதற்குமே செலவழிக்க வேண்டியிருக்கிறது. எனினும் வாசிக்கிறேன். நான் மதிக்கும் சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இணையத்திலும், எப்படியும் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இலங்கையைப் பொறுத்தவரையில் கவிதை, சிறுகதை, விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் போன்ற இலக்கியவிடயங்களுக்கு மட்டுமேயான இதழ்கள் வெளிவருவது இக்காலகட்டத்தில் மிகக் குறைவு. ‘யாத்ரா’, ‘கலைமுகம்’, ‘எதுவரை‘ போன்ற ஒரு சில தரமான இதழ்களை மட்டும் விரல்விட்டு எண்ணிவிடலாம். முன்பு ‘மூன்றாவது மனிதன்‘ என ஒரு இதழ் வந்தது. காத்திரமான இதழாக, பலரதும் வரவேற்பைப்பெற்ற இவ்விதழும் யுத்தச் சூழ்நிலை காரணமாக நின்று போயிற்று. இப்படியாக தரமான இலக்கிய இதழ்கள் இல்லாதது இலங்கையில் வளரும் சந்ததியைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய குறையாக அமைகிறது. எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம்கொண்ட இளைய சமுதாயம் வாசித்து, எழுதி தம் திறமையை வளர்த்துக் கொள்ள தரமான இதழ்கள் இல்லாதது இலங்கையைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் நஷ்டமாக அமைகிறது. அவர்களது வாசிப்பு இலங்கையில் இலகுவாகக் கிடைக்கும் மலிவான சினிமா இதழ்களோடு நின்றுவிடுகிறது.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் உயிர்மை, காலச்சுவடு, யுகமாயினி, வடக்குவாசல், உன்னதம், வார்த்தை, தீராநதி இன்னும் பல தரமான இலக்கிய அச்சு இதழ்கள் தொடர்ந்தும், காத்திரமான இலக்கியங்களோடு வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இணையத்தளத்திலும் கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, புகலி, பதிவுகள் எனப் பல இலக்கிய இணைய இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவையனைத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கு அவர்களது வளர்ச்சியில் பெரும் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறேதான் எனது வாசிப்புக்கும், எழுத்துக்கும் இவ் இதழ்கள் அனைத்தும் பெரும் உதவியாக அமைந்துள்ளன.

* தமிழ் எழுத்தாளர் வாழ்வதற்கான சிறந்த நாடு?

தற்பொழுது தமிழில் வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் சிறந்த நாடாக இலங்கையைச் சொல்ல முடியாதுள்ளது. நான் மேற்சொன்னது போல ஒருவர் சிறந்த எழுத்தாளர் ஆவதற்கு முன்னர் அவர் நிறைய வாசித்திருக்கவேண்டும். அவரது வாசிப்பு மட்டுமே அவரை நல்ல எழுத்தாளராக ஆக்கக் கூடியது. அதற்கான ஊடக வசதி, பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் என்பன இலங்கையில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவு தற்பொழுது இல்லை. எதிர்காலத்தில் சீராகுமென நம்புகிறேன்.

சிறந்த பல இலங்கை எழுத்தாளர்கள் தற்பொழுது புலம்பெயர்ந்து போயுள்ளார்கள். அவர்களது எழுத்துக்களில் தாய்மண்ணைப் பிரிந்த ஏக்கம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அந்த எழுத்துக்களில் அவர்களது மண் மணக்கிறது. ஆகவே சிறந்த எழுத்தாளரெனத் தன்னை அடையாளம் கண்டபிற்பாடு அவர்கள் எந்த நாட்டிலிருந்து எழுதினாலும் அந்த எழுத்துக்கள், தாய்மண்ணின் மணத்தோடுதான் பிரதிபலிக்கும்.

அடுத்ததாக இலங்கையில் தற்பொழுது பூரணமான கருத்துச் சுதந்திரத்தை நான் காணவில்லை. ஒரு எழுத்தாளருக்கு, ஊடகவியலாளருக்கு கருத்துச் சுதந்திரம் மற்றும் எழுத்துச் சுதந்திரம் மிக மிக அவசியமானது. அது தற்போதைய இலங்கைச் சூழலில் அரிதாகவே எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிறது. எனவே, வெளிவரும் தமிழ் ஊடகங்களை வைத்தும், இருக்கும் வசதிகளை வைத்தும் தற்பொழுது தமிழ் எழுத்தாளர் வாழ்வதற்கான சிறந்த நாடு என இந்தியா, தமிழ்நாட்டைச் சொல்லலாம்.

* உங்கள் படைப்புகளை எந்த மொழியில் மொழி மாற்றம் செய்ய விருப்பம்?

எனது எழுத்துக்களை, அதே ரசனையோடு வாசிக்கப்படக் கூடிய எல்லா மொழிகளிலும். உதாரணமாக பாலஸ்தீனக் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இலங்கை தமிழ் வாசகர்களிடத்தில் பலத்த வரவேற்பினைப் பெற்றது. தனது மண் மீதான யுத்தம், அது ஏற்படுத்திய துயர் சார்ந்த தாக்கங்கள் அக் கவிதைகளில் பாடப்பட்டிருந்தன. அவற்றை வாசித்த எல்லா வாசகர்களாலும் அக் கவிதைகளைத் தங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியுமாக இருந்தன. அவை போல எழுத்தை, கலையை நேசிக்கும் எல்லா மொழிகளிலும்.

* தமிழ் தவிர உங்களுக்கு தெரிந்த மொழிகளின் சிறப்புகள் பற்றி?

சிங்கள மொழியிலான இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு. அக் கிராமியக் கதைகளும், நாட்டுப்புறக் கவிதைகளும் பிடித்தமானவை. அக் கதைகள், கவிதைகள் ஆரம்பகாலத்தில் பாமர மக்களால் சொல்லப்பட்டவை. விவசாயிகளின் வயல்வேலைக் காலங்களில் பாடப்படும் பாடல்கள், சேனை நிலங்களில் இரவுக் காலங்களில் பயத்தையும் தனிமையையும் அகற்றப் பாடப்படும் பாடல்கள், தாலாட்டு, பேயோட்டப் பாடல்களென இன்னும் பல பாடல்கள் அவர்களது மரபுமொழியில் பாமரர்களிடமிருந்து வழக்கத்தில் வந்தவை இன்றும் உள்ளன. இலங்கை அதிசயமான சீகிரிய குகை ஓவியத்தோடு, ‘குருட்டு கீத‘ என அழைக்கப்படும் சில கவிதைகளும் வரையப்பட்டுள்ளன. உலக நாடுகளில் இலங்கையில் மட்டுமே பாவிக்கப்படும் இம் மொழியிலான அனேகமான இலக்கியங்கள் தமிழைப் போலவே, காலத்தைக் கடந்து இன்றுவரையில் நிலைத்திருக்கும்படியான சிறப்பினைக் கொண்டிருக்கின்றன. எனினும் சிங்கள மொழி ஒரு தீவு மொழியாக மட்டும் இருப்பதால் தமிழ் இலக்கியங்களைப் போல, உலகளாவிய ரீதியில் போதிய அளவு வரவேற்பையோ உலகப்புகழையோ அம் மொழியிலான இலக்கியங்கள் பெறவில்லை.
* எழுத்தாளர்கள் என்ன மாதிரி கௌரவிக்கப்பட வேண்டும்?

பெரிதாக எதுவும் தேவையில்லை. முதலாவதாக எழுத்தாளர்களுக்கு கருத்துச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் மிக மிக அவசியம். அவை இல்லையேல் சிறந்த படைப்புக்களை அவர்களால் வழங்குவது சாத்தியமில்லை. அடக்குமுறைகளுக்குள் ஆட்பட்டு எழுதுவதெனும்போது அப் படைப்பு எழுத்தாளரது பூரணமான மனப்பாங்கை வெளிக்காட்டும் படைப்பாக இராது. அத்தோடு இன்று பல அரசுகள் எழுத்தாளர்களை நோக்கித் தங்கள் சாட்டைகளை வீசுகின்றன. அவர்களது நூல்களை, படைப்புக்களை தடை செய்கின்றன. இந்த நிலை மாறவேண்டும்.

அடுத்ததாக, அவர்களை அவர்களாக எழுதவிட்டால் போதும். ஒரு எழுத்தாளர் ஒரு குறிப்பிட்ட கருவில், உதாரணமாக யுத்தம் பற்றியோ, காதல் பற்றியோ தொடர்ந்து நாலைந்து கவிதைகளை, கட்டுரைகளை எழுதிவிட்டால் போதும். அவரை யுத்தம் பற்றி மட்டுமே எழுதிவருகிறார், அல்லது காதல் கவிஞர் என முத்திரை குத்திவிடுகிறார்கள். இந் நிலை தவிர்க்கப்படல் வேண்டும். அவர்கள் எழுத்தாளர்கள். எழுதட்டும். நீங்கள் வாசியுங்கள். தவறெனக் கண்டதைச் சுட்டிக் காட்டுங்கள். அவர்களை மேலும் வளர்த்துக்கொள்ள அது உதவும். இதுவே எழுத்தாளர்களுக்குச் செய்யும் மிகப்பெரும் கௌரவம்.

* ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளர் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

நான் மேலே குறிப்பிட்டது போல நிறைய வாசிக்கவேண்டும். நல்ல வாசிப்பு மட்டுமே மனிதனைப் பூரணப்படுத்தும். எழுத்தையும் கூட.

* எழுதியதில் பிடித்தது? பிடிக்காதது?
எனது எழுத்துக்கள் குறித்து பலரும் பாராட்டுகிறார்கள்தான். ஆனால் நான் இதுவரை எழுதிய எதிலும் இன்னும் ஒரு முழுமையான திருப்தி எனக்கு வரவில்லை. அந்தத் திருப்தியை நான் ஒவ்வொரு முறை எழுதும்போதும் தேடிக் கொண்டே இருக்கிறேன். அதுவே என்னைத் தொடர்ந்தும் எழுதவைக்கிறது என நினைக்கிறேன். எனது எழுத்துக்களில் எனக்கு முழுமையான திருப்தி வரும் நாளில் நான் எழுதுவதை நிறுத்திவிடக் கூடும்.

* படித்ததில் மறக்க முடியாதது?

கவிஞர் ஃபஹீமா ஜஹானின் கவிதைகள் – இக் கவிதைகளே முதன்முதலாகக் கவிதைகள் குறித்த ஈர்ப்பை என்னுள் ஏற்படுத்தியது. நான் கவிதைகள் எழுத ஆதர்சமாகவும் ஒரு நம்பிக்கையைத் தந்தவையாகவும் இருந்த கவிதைகளை எழுதியவர் இவரெனச் சொல்லலாம். இவரது கவிதைகள் குறித்தான பிரமிப்பு இன்னும் என்னை விட்டும் நீங்கவில்லை.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் – கத்தார் வந்த பிறகு இணையம் அறிமுகம் செய்துவைத்த எழுத்தாளர் இவர். இவரது சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள் என எல்லா எழுத்துக்களுக்குமான ரசிகன் நான். மிகச் சுவாரஸ்யமான, எளிமையான, கவரக்கூடிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். இப்பொழுதும் மனம் சோர்வாக உணரும் தருணங்களில் இவரது எழுத்துக்களைத்தான் எடுத்துவைத்து வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏதோவொன்றைத் தேடவைத்துக் கொண்டே இருக்கின்றன அவை. இங்கு அறை முழுதும் என்னுடன் இருக்கும் தனிமை தரும் சோர்வை, மிகக் கொடியதாக நான் உணரும் தருணங்களில் இவரது எழுத்துக்களைத்தான் துணைக்கெடுத்துக் கொள்வேன். அற்புதமாக, காயங்களுக்கு மயிலிறகுத் தடவலையொத்த, இலாவகமான வரிகளில் கண்கள் அலுப்பின்றி மேய்ந்துகொண்டே இருக்கும். என் வாழ்வினைக் கோர்த்திருக்கும் சம்பவங்களோடு இவரது கதைகள் நிகழும் களம், அதன் கதாபாத்திரங்கள், அதன் சூழல்..இப்படி ஏதேனுமொன்றாவது ஒத்துப் போகும். அல்லது அவற்றுடன் பொருத்திப் பார்த்துக் கதை மானிடராக என்னை உணரும்படி செய்யும். இவரது ‘அங்கே இப்ப என்ன நேரம்? ‘ தொகுப்பு பல தடவை என்னை மீண்டும் மீண்டும் வாசிக்கச் செய்கிறது. அது போலவே ‘அக்கா’, வம்சவிருத்தி’, ‘மகாராஜாவின் இரயில் வண்டி’ ,’ திகடசக்கரம்‘ மற்றும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கள். இவையெல்லாம் என்னில் எழுதும் ஆர்வத்தையும் நானாகக் கதை சொல்லிப் பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டின.

* ஒரு எழுத்தாளரை பிரபலப்படுத்துவது புத்தகமா? பத்திரிக்கையா? தொலைக்காட்சியா? வானொலியா? அல்லது திரைப்படங்களா?
ஒரு எழுத்தாளரைப் பிரபலப்படுத்துவது எனச் சொல்லப்போனால் நிச்சயமாக புத்தகம், பத்திரிகை போன்ற அச்சு ஊடகங்கள்தான். இவை காலத்தோடு அழிந்துவிடுபவை அல்ல. தொலைக்காட்சி, வானொலி, திரைப்படங்களென வரும்போது எந்த எழுத்தாளரும் தனக்காக அல்லாது அதில் சார்ந்திருக்கும் பிறருக்காக உழைக்கவேண்டியிருக்கிறது. அதன் வாசகர்களுக்காக, அவர்களது திருப்திக்காக இசைந்தும் சார்ந்தும் போகவேண்டியிருக்கிறது. இப்படிப் போகும்போது எழுத்தாளர் அங்கே தன்னை இழக்கிறார். அந்த ஊடகத்துக்காக உழைககும் ஒரு உழைப்பாளி ஆகிறார். ஆகவே எழுத்தாளர், தனது முழுத் திருப்திக்காக எழுத உதவுவது அச்சு ஊடகங்கள்தான். அவை தரும் பிரபலமே அவரது எழுத்துக்களுக்கு மட்டுமே கிடைத்த உண்மையான புகழ் மற்றும் கௌரவம் எனலாம்.

Post to Twitter

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக 'நாம்' என்று type செய்ய 'naam' என்று type செய்து ஒரு முறை spacebar -ஐ அழுத்தினால் போதும்.